கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

பனை ஓலை, ஆகாயத்தாமரை மூலம் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பனை ஓலை மற்றும் ஆகாயத்தாமரைகளை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- நாகை மாவட்டத்திலேயே முதல் முதலாக இந்த பகுதியில் தான் இது மாதிரி கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூலப் பொருட்களை விலை இல்லாமல் நம் கிராமத்திலேயே பெற்றுக் கொண்டு அதனை கைவினைப் பொருட்களாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யலாம். இந்த தொழில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதேபோன்ற பயிற்சி வேதாரண்யத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.






