வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வருவாய் ஆய்வாளர்கள் வாட்ஸ்-அப் குழு உருவாக்கி மழை விவரங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வருவாய் ஆய்வாளர்கள் வாட்ஸ்-அப் குழு உருவாக்கி மழை விவரங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் 7 வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை மண்டல குழு அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
வாட்ஸ்-அப் குழு
மேலும் வருவாய் ஆய்வாளர்கள் ஊராட்சி அளவிலான வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மாவட்டத்தில் பழைய கட்டிடங்களில் யாரும் இருந்தால் இந்த மழை காலங்களில் அவர்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 248 ஏரிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 12 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. அந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை சரிசெய்து தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
நீர்நிலை பகுதிகளில் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் செல்ல அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04179--222111, 229008 என்ற எண்களிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04179--221104, 221103, 221102 என்ற எண்களிலும் பொது மக்கள் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பச்சையப்பன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தயாராக இருக்க வேண்டும்
இதேபோன்று திருப்பத்தூர் வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசுகையில், 'கால்வாய்களில் அடைப்புகள் காணப்பட்டாலோ, ஏரிகளின் மதகுகள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டலோ அவை குறித்து விரிவான அறிக்கையினை அந்த பகுதி தாசில்தாருக்கும், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியான மீட்பு பணிகள் மேற்கொளவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தாசில்தார் சிவப்பிரகாசம், உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.