சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கம் -அமைச்சர் தகவல்


சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கம் -அமைச்சர் தகவல்
x

சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சென்னை,

தொழில் வணிகத் துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள தொழில் வணிக ஆணையரகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "என்.இ.இ.டி.எஸ்., யு.ஒய்.இ.ஜி.பி., பி.எம்.இ.ஜி.பி'' ஆகிய 3 சுய தொழில் திட்டங்களின் வாயிலாக 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றனர். மகளிர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்களில் இருந்து 2 ஆயிரத்து 741 பேருக்கு தொழில் தொடங்க அனுமதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

கிராமப்புற மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.502 கோடியில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தினை ஊராட்சிகள் தோறும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

துரித நடவடிக்கை

தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10 வகையான மானிய திட்டங்களின் கீழ் நடப்பு ஆண்டு 1,618 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.85 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள மானியங்களை இந்த நிதியாண்டுக்குள் வழங்கிட வேண்டும்.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் சமச்சீர் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கூடுதல் முதலீட்டு மானியத்தினை முழுமையாக பயன்படுத்தி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், செயல்படுத்தப்படும் ஒற்றைச்சாளர தகவு திட்டத்தின் கீழ் இதுவரை 18 ஆயிரத்து 916 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்னை சாகுபடி...

ரூ.34.21 கோடி அரசு மானியத்துடன் ரூ.40.37 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட 5 கயிறு குழுமத் திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து தென்னை சாகுபடி விவசாயிகளுக்கும், தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் பூங்கொடி, தொழில் வணிக கூடுதல் இயக்குனர் ஏகாம்பரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story