123 ஏக்கரில் நகர்வனம் உருவாக்கம்


123 ஏக்கரில் நகர்வனம் உருவாக்கம்
x

சேலம் குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் 123 ஏக்கரில் நகர்வனம் உருவாக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்

சேலம் குரும்பப்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில் வனத்துறை சார்பில் வன திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுவிழா நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மண்டல வனபாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் வனத்துறையினர் 75 மரக்கன்றுகளை நட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காக இந்தாண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 400 நகர்வனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் நகர் வனங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் குரும்பப்பட்டி காப்புக்காட்டில் 123 ஏக்கர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு நகர் வனம் உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் செடிகள் நடுதல், சிறு குளங்கள், தடுப்பணைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story