செடி, கொடிகளுடன் வலம் வரும் பசுமை ஆட்டோ


செடி, கொடிகளுடன் வலம் வரும் பசுமை ஆட்டோ
x

குமரியில் செடி, கொடிகளுடன் பசுமை ஆட்டோவை டிரைவர் ஓட்டி வருகிறார். இந்த முயற்சிக்கு பயணிகளின் பாராட்டு குவிகிறது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரியில் செடி, கொடிகளுடன் பசுமை ஆட்டோவை டிரைவர் ஓட்டி வருகிறார். இந்த முயற்சிக்கு பயணிகளின் பாராட்டு குவிகிறது.

ஆட்டோ டிரைவர்

பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை பயணங்களுக்கு தவிர்க்க முடியாத வாகனமாக ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோவை ஓட்டும் நபர்களோ பலவிதம்.

படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுபவர்கள், வறுமையான சூழலுக்கு இடையே குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் ஆட்டோ டிரைவர்கள், தன்னாலும் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையில் ஆட்டோ ஓட்டும் பெண்கள் என ஆட்டோ டிரைவர்கள் பலவிதம். சிலர் ஆட்டோக்களை எப்போதும் தூய்மையாக பளபளவென ஜொலிக்கும் வகையிலும், ஆட்டோக்களில் பல ஆயிரம் செலவு செய்து உள் அலங்காரத்தையும் செய்து வைத்திருப்பர். சிலர் ஆட்டோக்களில் நூலகம் போல் புத்தகங்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறோம்.

செடி, கொடிகளுடன் வலம் வருகிறார்

இதில் இன்னொரு வகையாக ஓட்டும் ஆட்டோவுக்குள்ளேயே செடி, கொடிகளை வளர்த்து ஓட்டுகிறார் குலசேகரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர். இவர், நான் தான் உண்மையான பசுமை ஆட்டோவை ஓட்டுகிறேன் என்கிறார்.

குலசேகரம் அருகே அஞ்சு கண்டறையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42), இயற்கை ஆர்வலரான இவர் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தான் ஓட்டும் ஆட்டோவின் உள் பகுதிகளில் தண்ணீர் பாட்டில்களில் வளரும் 'மணி பிளான்ட்', 'லக்கி ட்ரீ ' போன்ற செடிகளை படர விட்டு அசத்துகிறார். இவரின் இந்த செயல் ஆட்டோவில் ஏறும் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றது. அவரின் இந்த முயற்சியை அவர்கள் பாராட்டவும் செய்கிறார்கள்.

விழிப்புணர்வு...

இதுகுறித்து இந்த ஆட்டோவை ஓட்டி வரும் கண்ணன் கூறியதாவது:- நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இயற்கையின் மீதும், மரம், செடி கொடிகளின் மீதும் அலாதி பிரியம் உண்டு. பொதுவாக ஆட்டோவில் சிலர் பிளாஸ்டிக் பூங்கொத்துகளை தொங்க விடுவதுண்டு. நான் அதற்கு மாறாக யோசித்து உண்மையான செடி, கொடிகளை வளர்த்துள்ளேன். இவை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுத்தமான ஆக்சிஜனை வழங்கும் என நம்புகிறேன். இதேபோல் மரங்களை வளர்க்க வேண்டும் என ஆட்டோவில் வரும் பயணிகளுக்கும் ஆர்வம் வரும். உண்மையில் நான் ஓட்டுவதும் ஒரு பசுமை ஆட்டோ தான் என்கிறார், பெருமிதத்துடன் கண்ணன்.


Next Story