50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி
காரைக்குடி அருகே பொங்கலை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே பொங்கலை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
கிரிக்கெட் போட்டி
தமிழகம் முழுவதும் 1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் பரவலாக பரவ தொடங்கியது. கபடி போட்டிகளை ஆக்கிரமித்திருந்த கிராம பகுதிகளிலும் இளைஞர்கள் ஆர்வமாக கிரிக்கெட் விளையாட தொடங்கி இருந்தனர். கல்லல், கீழப்பூங்குடி, ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, செம்பனூர், செவரக்கோட்டை, வெற்றியூர், வேப்பங்குளம், மேலப்பூங்குடி, சிறுவயல், மேலமாகாணம், ஆலங்குடி, தளக்காவூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிரிக்கெட் போட்டிகள் ஏராளமாக நடைபெற தொடங்கியது. ரப்பர் பந்து மற்றும் டென்னிஸ் பந்துகளில் நடந்த இந்த போட்டிகளில் ஏராளமான கிராமத்து இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.
1990-ம் ஆண்டுகளின் போது இளைஞர்களாக இருந்து இந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடியவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள். 30 ஆண்டுகளை கடந்த நிலையில் அனைவருக்கும் குறைந்தது 50 வயதை கடந்து குழந்தைகள், பேரன், பேத்தி என்ற அளவிலான வாழ்க்கை நிலையில் உள்ளனர்.
50 வயதை கடந்தவர்கள்
இவர்கள் அனைவரையும் மீண்டும் கிரிக்கெட் என்ற விஷயம் ஒன்றாக இணைத்துள்ளது. வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கல்லலில் வருகிற 18-ந் தேதி ஓ.பி.எல். என்ற கிரிக்கெட் போட்டியை இவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் 1990-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாடிய கல்லல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக வாட்ஸ்-அப் குழு ஒன்று தொடங்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள 1990-களில் கிரிக்கெட் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். டென்னிஸ் பந்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் எனவும், திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.