கிரிக்கெட் வீரர் ரெய்னா உள்பட 4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு


கிரிக்கெட் வீரர் ரெய்னா உள்பட 4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
x

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்பட 4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 12-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் 4 ஆயிரத்து 11 இளநிலை பட்டங்களும், 583 முதல்நிலைப் பட்டங்களும், 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும், 148 முனைவர் பட்டங்களும் என மொத்தம் 4,829 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், 68 தங்கப்பதக்கங்களும், 48 வெள்ளி பதக்கங்களும், 43 வெண்கல பதக்கங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டதோடு, சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் சிலரின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.

சுரேஷ் ரெய்னா, சங்கர்

இதுதவிர, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குனர் ஷங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, 'ராடிசன் புளூ' குழும தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக இணை வேந்தர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஜோதி முருகன், இணைவேந்தர் (கல்வி) ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக்குழும துணைத்தலைவர் பிரீத்தா கணேஷ், பதிவாளர் சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

விழா நிறைவடைந்ததும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அறிவியல், விளையாட்டு, சினிமா, தொழில்துறையை சேர்ந்த4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் சிம்புவிற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சினிமா துறை சார்பில் இமாலய இயக்குனர் ஷங்கருக்கும், அதேபோல 'சின்ன தல' என அனைவராலும் அழைக்கப்படும் கிரிக்கெட் 'ஆல்ரவுண்டர்' சுரேஷ் ரெய்னாவுக்கு விளையாட்டுத்துறை சார்பிலும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் அளிக்கிறது' என்றார்.

தனிச்சிறப்பாக இருக்கும்

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்போது, 'சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கிறேன். சென்னைக்கு எப்போது வந்தாலும் எனக்கு அது தனிச்சிறப்பாகத்தான் இருக்கும். நான் முதலில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்பட இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், 'தினத்தந்தி' நாளிதழை ஆராய்ச்சி செய்து ஜோதிடத்துறையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த தேரிசெல்வம் என்பவர் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.


Next Story