கிரைம் செய்திகள்


கிரைம் செய்திகள்
x

கிரைம் செய்திகள்

திருச்சி

திருட முயன்றவர் கைது

*முசிறி அருகே வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 64). இவரது வீட்டில் திருட முயன்ற மணப்பாறை மோர்குளம் பூங்கா ரோட்டை சேர்ந்த ஜாவித் உசேன் (36) என்பவரை அப்பகுதியினர் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடியதில் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனையடுத்து அவரை பிடித்து அப்பகுதியினர் முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து ஜாவித் உசேனை கைது செய்தார்.

ரவுடி உள்பட 2 பேர் கைது

*திருச்சி பொன்மலைப்பட்டி ஜீவா தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (21). வெல்டரான இவர் பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றபோது, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் (35) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.

*இதேபோல் திருச்சி கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (53) என்பவர் பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி (23) என்பவர் மகேந்திரனை வழிமறித்து கத்தியை காட்டி ரூ.2 ஆயிரம் பறித்து சென்றார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமஸ் அந்தோணியை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.

வக்கீல்கள் மோதல்

*திருச்சி குற்றவியல் வக்கீல்கள் சங்க 46-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் மத்திய பஸ் நிலையத்தின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது வக்கீல்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசினர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story