கிரைம்செய்திகள்
கிரைம்செய்திகள்
மளிகை கடை சூறை
*திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரெஜினா (வயது 47). இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை மளிகை கடைக்கு அதேபகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (21) என்பவர் சிகரெட் வாங்க வந்தார். அப்போது ஏற்கனவே உள்ள பழைய பாக்கி ரூ.500 கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வெங்டேஷ் பீர்பாட்டிலை வீசி கடையில் இருந்த பொருட்களை சூறையாடியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்ற பாஸ்கரின் மகளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ரெஜினா அளித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
*திருச்சி சங்கிலியாண்டபுரம் காளியம்மன்கோவில் தெரு அருகே கஞ்சா விற்றதாக காஜாபேட்டையை சேர்ந்த யேசு (55) என்பவரை பாலக்கரை போலீசாரும், விமானநிலையம் பாரதிநகர் அருகே கஞ்சா விற்றதாக காமராஜ்நகரை சேர்ந்த அப்பாவு சகாயராஜ் (58), மேலப்புலிவார்டுரோட்டில் உள்ள இப்ராகிம்பூங்கா அருகே கஞ்சா விற்றதாக காந்திமார்க்கெட்டை சேர்ந்த விஜய் (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் மீது தாக்குதல்
*திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் ஆனந்தா ஸ்டோரை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (22). மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு பழைய குட்ஷெட் ரோட்டில் உள்ள ெரயில்வே மைதானம் அருகே பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு சிலர் சத்தம்போட்டு கொண்டிருந்தனர். இதனை தட்டி கேட்டபோது, அஜித் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து அப்துல் ரஹீமை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
*திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (23). சுமைதூக்கும் தொழிலாளியான இவரிடம் பணம் பறிக்க முயன்றதாக சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜெயபாலன் (51), கண்ணதாசன் (21) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
*திருச்சி தாராநல்லூரை சேர்ந்த ரவுடி மதன் என்கிற மதன்குமார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஏற்கனவே இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளன. எனவே அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மதன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மதன்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
பீர்பாட்டிலால் தாக்குதல்
*உப்பிலியபுரத்தை அடுத்த கொப்பம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (22). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நோபில் (42) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நோபில் பீர்பாட்டிலால் சுரேஷை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.