கிரைம்செய்திகள்


கிரைம்செய்திகள்
x

கிரைம்செய்திகள்

திருச்சி

கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு

*சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறை புது தெருவை சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது 50). கொத்தனாரான இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் உறவினரான கோபி என்ற கோபிநாத் (42) என்பவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபி, மலர்மன்னனை அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

பெயிண்டர் தற்கொலை

*திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் மகன் பாலகிருஷ்ணன் (35). பெயிண்டரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்க நகை திருடியவர் கைது

*மண்ணச்சநல்லூர் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த மணி மனைவி அமுதா (47). இவர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற அவர் இரவு வீடு திரும்பி உள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஓடு பிரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 2½ பவுன் நகை திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சுதாகர்(35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.

மொபட், செல்போன்கள் பறிமுதல்

*திருவெறும்பூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 4-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (42), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(60), வடக்கு காட்டூர் பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார்(48), பாத்திமாபுரம் 2-வது தெருவை சேர்ந்த மாரியப்பன்(52), பாரதிதாசன் நகர் 7-வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(46) ஆகிய 5 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 45, ஒரு மொபட் மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*முசிறி பாலத்து மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இதனை திருடியதாக முசிறி சந்தையை சேர்ந்த அய்யாவு (41) என்பவரை முசிறி போலீசார் கைது செய்தனர்.

3 டிரைவர்கள் கைது

*திருச்சி மேலப்புதூர் பகுதியில் தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்ற போது 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதின. இதில் 2 பள்ளி மாணவிகள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சி தெற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார், பஸ் டிரைவர்களான பிரவீன்குமார் (33), சரண் (23), செல்வராஜ் (57) ஆகியோரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.


Next Story