கிரைம் செய்திகள்
கிரைம் செய்திகள்
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
*திருச்சி பாலக்கரை செங்குளம்காலனி பால்வாடி பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக செங்குளம்காலனியை சேர்ந்த மூர்த்தி (வயது 30), மாணிக்கம் (37) ஆகிய 2 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், சலைன் வாட்டர் பாட்டில் மற்றும் 3 ஊசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை
*திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி மாரியம்மன்கோவில் பின்புறம் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றதாக சூர்யா (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 7 பேர் கைது
*திருச்சி காந்திமார்க்கெட் ஏ.பி.நகர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு சிலர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 சீட்டுகட்டு, ரூ.10 ஆயிரத்து 200-ஐபறிமுதல் செய்தனர்.
செல்போன் திருட்டு
*புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் ஆகாஷ் (22). இவர் நேற்று முன்தினம் திருச்சி ஜங்ஷன் பகுதியில் பஸ் ஏறி மத்திய பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஆகாஷின் செல்போனை திருடி கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார். ஆனால் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த சம்பத்ராஜ் (30) என தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மனைவி மீது தாக்குதல்
*மணிகண்டம் அன்புநகரை சேர்ந்தவர் சுசீலா (34). இவரது கணவர் சரவணன் (42). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டகள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி வழக்கு விசாரணைக்காக திருச்சி கோர்ட்டுக்கு சுசீலா வந்தார். அப்போது அங்கு வந்த சரவணன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
*துவரங்குறிச்சியில் பழையபாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்பவரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5,590 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் துவரங்குறிச்சி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பிராப் (25) என்பவரது கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களும், சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ( 45) என்பவரது கடையில் ரூ.4480 மதிப்புள்ள புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.10ஆயிரம் பறிமுதல்
*லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அப்பகுதியை சேர்ந்த ரவி, ரத்தினவேல், சங்கர், பிரசன்னா ஆகிய 4 பேரை லால்குடி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10,020 பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் பறித்தவர் கைது
*திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் டோனி (34). இவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மர்மநபர் ஒருவர் டோனியிடம் விமான நிலையத்துக்கு வழிகேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென்று அவர் அரிவாளை காட்டி மிரட்டி டோனி பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டோனியிடம் பணம் பறித்தது தஞ்சை நாஞ்சிகோட்டை சாலை முனியாண்டவர் காலனியை சேர்ந்த மார்ட்டின் (43) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கார், அரிவாள் விலைஉயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.