குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும்


குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும்
x

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிக்க விடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத்தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (வேலூர்), ஆல்பர்ட்ஜான் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசியவதாவது:-

வேலூர் சரகத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை தயார் செய்து, அந்த கிராமத்தில் தலைவர், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைத்து அவர்களுடன் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தண்டனை பெற்றுத்தர வேண்டும்

இந்த கிராமத்தில் குழந்தை திருமணம் நடைபெறாது என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களை தப்பிக்க விடாமல் கோர்ட்டில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அவ்வாறு பணியாற்றும் போலீசார் கவுரவிக்கப்படுவார்கள்.

வன்கொடுமை, தீண்டாமை வழக்குகளில் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இழப்பீடு

கோர்ட்டில் பிறப்பிக்கப்படும் வாரண்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களை ஆஜராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து வழக்குகளில் அக்கறை செலுத்தி, மீண்டும் விபத்துகள் நடக்காத வகையில் அறிவிப்பு பலகை வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக வேலூர் சரகத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் போக்சோ, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 100 போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நகை திருட்டு வழக்கில் 90 பவுன் நகைகளை மீட்ட போலீசாருக்கு தனது சொந்த பணம் ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்டினார். போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனையும் பாராட்டினார். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உடனிருந்தார்.


Next Story