ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசுகிறார் -டி.டி.வி.தினகரன்


ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசுகிறார் -டி.டி.வி.தினகரன்
x

ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசுகிறார் டி.டி.வி.தினகரன் கண்டனம்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது. 1996-ல் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தாலும், அவர்கள் ஏற்படுத்திய கடும் நெருக்கடிகளையும் தாண்டி பீனிக்ஸ் பறவையைப் போல் எழுந்து வந்தவர் ஜெயலலிதா.

எத்தனையோ குற்றச்சாட்டுகளையும், பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது.

தன் பெரும் அறிவைப் பயன்படுத்தி ஊழல் தொடர்பாக கருத்தைக்கூறும் அண்ணாமலை, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கும், அதில் ஊறித்திளைத்த அமைச்சர்களுக்கும் எதிராக மத்திய அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல முடியுமா?.

தி.மு.க. அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா?. வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.

முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்புக்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story