அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள் மனிதர்களை கொல்கிறதா?
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள் மனிதர்களை கொல்கிறதா?
போடிப்பட்டி,
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள் மனிதர்களை கொன்று தின்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலை குட்டிகள்
சுற்றுலா தலமாக விளங்கி வரும் அமராவதி அணைக்கு அருகில் முதலைப் பண்ணை அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கழுகுகள் உள்ளிட்ட பறவைகள் உணவாக்கி கொள்வதற்காக தூக்கி வரும்போது தவறி விழும் முதலைக்குட்டிகள் அமராவதி ஆற்றில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர், கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது அமராவதி ஆற்றில் நீந்தும் முதலைகள் மற்றும் பாறைகளில் ஓய்வெடுக்கும் முதலைகளை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வனத்துறையினர் அவற்றை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளனர். அதேநேரத்தில் இதுவரை முதலைகளால் பொதுமக்களுக்ேகா, கால்நடைகளுக்கோ ஆபத்து ஏற்படவில்லை என்பதால் பொதுமக்கள் முதலைகளோடு வாழப் பழகி விட்டனர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அமராவதி ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளில் இயல்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் நீர்க்காகங்கள் மற்றும் மீன்களை உணவாகக் கொண்டு முதலைகள் அதே பகுதியில் வசிக்கிறதா? அல்லது இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் நிலவி வருகிறது.
இந்தோனேஷியாவில் எடுத்தது
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு முதலை மனிதனின் கால்கள் மட்டும் வெளியே தெரியும் நிலையில் கவ்விக் கொண்டு நீந்திச் செல்கிறது. இது உடுமலையையடுத்த கல்லாபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் நடந்த சம்பவம் என்ற வாசகங்களோடு இந்த வீடியோ பரப்பப்பட்டு வந்தது. தற்போது மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மனிதனைக் கொன்ற முதலை என்ற வாசகங்களோடு ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ளாமல் பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தொடர்ச்சியாக பரவி வரும் இந்த கொடூரமான வீடியோவால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு எழுந்துள்ளது. இந்தநிலையில் இது அமராவதி ஆற்றில் நடைபெற்ற நிகழ்வு இல்லை என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை சிலர் தவறான தகவலோடு பரப்பி பொதுமக்களிடையே அச்ச உணர்வை உருவாக்கி வருகிறார்கள். எனவே பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.