குறுவை அறுவடை பணி தீவிரம்


குறுவை அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

முத்துப்பேட்டை ஒன்றிய பகுதியில் குறுவை அறுவடை பணி தீவிரம் நடந்தது.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

குறுவை சாகுபடி

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது.

இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வமுடன் தொடங்கினர்.

தண்ணீர் தட்டுப்பாடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள இடையூர், பாண்டி, குன்னலூர், உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவ மழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றினர்.

அறுவடை பணி

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எந்திரம் மூலம் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பதால் சம்பா சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story