15,324 பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசிநாள் என்றும், மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 324 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசிநாள் என்றும், மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 324 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பயிர் காப்பீடு
சிவகங்கை மாவட்டத்தில், ராபி பருவத்தின் நெல், மிளகாய், நிலக்கடலை, வாழை, வெங்காயம் மற்றும் கரும்பு பயிர்களை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நெல் 11 பயிருக்கான காப்பீடு செய்வதற்கான காலக்கெடு வருகிற 15-ந் தேதி என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நடப்பு சம்பா பருவத்தில், இன்றுவரை 15 ஆயிரத்து 324 விவசாயிகளால் 13 ஆயிரத்து 21 எக்டேர் நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர்.
காப்பீடு பதிவு செய்வதற்கு தேவையான பயிர் காப்பீட்டு அடங்கல் சான்றுகள், கிராம நிர்வாக அலுவலர்களால் அந்தந்த வருவாய் கிராமங்களிலேயே விவசாயிகளுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நடப்பு பருவ அடங்கல் சான்று மற்றும் வங்கி கணக்கு எண், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், நெல் ஏக்கருக்கான பிரீமியம் ரூ.438.57 தொகையினை, தங்கள் பகுதியிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி, உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
ரூ.870 கோடி இழப்பீடு
எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து, விவசாயிகள் தங்களை காத்துக்கொள்ளும் நோக்கில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலமாக ரூ.870 கோடி இழப்பீட்டு தொகையாக இம்மாவட்டத்திற்கு கிடைக்க பெற்றுள்ளது. மகசூல் இழப்பு ஏற்படும்போது மட்டுமன்றி, இளம்பருவ நெற்பயிருக்கு பெருவாரியான அழிவு ஏற்படும்போது 'விதைப்பு பொய்த்தல்" என்ற வகையான இழப்பிற்கும், இம்மாவாட்டத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் உடனடியாக தங்களின் நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை நீட்டிப்பு செய்திட வாய்ப்பில்லாததாலும், காப்பீடு செய்வதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதாலும், கடைசி நேர நெரிசலை தவிர்த்திடும் வகையில் விவசாயிகள் உடனடியாக பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.