சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை
சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு சம்பா பருவ நெல் பயிரினை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு வருகிற 15-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தில் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 270 விவசாயிகள் 29040 எக்டேர் நெல் பயரினை காப்பீடு செய்துள்ளனா். இன்னும் பதிவு செய்யாத விவசாயிகள், நடப்பு பருவ அடங்கல் சான்றினை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று அத்தியாவசியமான ஆவணங்களுடன் 1 ஏக்கர் நெல் பயிருக்கான பிரிமியம் தொகை ரூ.438.57 செலுத்தி உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு உதவிடு்ம் வகையில் நாளை(சனிக்கிழமை) மற்றும் 13-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) ஆகிய விடுமுறை தினங்களிலும் காப்பீடு பதிவு செய்யும் நோக்கில், பொது சேவை மையங்கள், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் திறக்கப்பட்டு, விவசாயிகளுக்கு காப்பீடு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இதுவரை காப்பீடு செய்யாத அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.