விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை விரைவில் வழங்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கூறினார்.
விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த 53 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல மரங்களை அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சிறப்பு கவனம் எடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். இந்த ஆண்டு விவசாய பணிகளுக்கு உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர்காப்பீடு
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு போதியளவு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான கடன்களை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு சில இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் போதியளவு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பணி விரைவில் தொடங்கப்படும். அதுவரை தற்காலிகமாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி பொருட்களை உரிய விலைக்கு விற்று பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.46.33 லட்சத்தில் டிராக்டர்களை கலெக்டர் வழங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செவ்வாய்பேட்டை ஊராட்சியில் புதிதாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அமைக்க அரசு ஆணையை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், விவசாயிகள் கலந்து கொண்டனர்.