நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை


நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை
x

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பயிர் காப்பீட்டு திட்டம்

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பில் இருந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர். ஆனால் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் என அறிவிக்கும் போது குறைந்த அளவிலேயே விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைத்து வருகிறது.

வேளாண் துறை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 856 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து வந்த நிலையில் 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2022-23-ம் ஆண்டிலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் இழப்பீட்டு தொகை தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என வேளாண்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்திய பகுதிகளில் தஞ்சாவூர் வட்டாரத்தில் காட்டூர் கிராமத்துக்கு மட்டும் ஆயிரத்து 351 பேருக்கு ரூ.95 லட்சத்து 21 ஆயிரத்து 477-ம், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்திய பகுதிகளில் பூதலூர் வட்டாரத்துக்குட்பட்ட சோளகம்பட்டியில் ஆயிரத்து 828 விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 237-ம், திருப்பனந்தாள் வட்டாரத்துக்குட்பட்ட பந்தநல்லூரில் 659 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 965-ம், திருவிடைமருதூர் வட்டாரத்துக்குட்பட்ட கட்சுக்கட்டு கிராமத்தில் 527 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 272-ம் என மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரத்து 951 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால மற்ற விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசே இனிவரும் காலங்களில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story