குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்


குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்
x

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்

தஞ்சாவூர்

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.

அதன் விவரம் வருமாறு:-

பயிர் காப்பீடு

ராயமுண்டான்பட்டி ஜீவக்குமார்:- குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். யூரியா உரம் கிடைக்கவில்லை. உர வினியோகத்தை தனியாரிடம் தராமல் அரசு மட்டும் வழங்க வேண்டும். குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் மண்வள மேம்பாட்டிற்கு உதவும் வகையில் வழங்கப்பட்ட பசுந்தாள் உரம் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் இன்னும் வழங்கப்படவில்லை.

வடக்குதோப்பு செந்தில்குமார்:- அம்மாப்பேட்டை பகுதியில் விளைநிலங்களை பாழாக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

பருத்தி கொள்முதல்

சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்:- தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் பருத்தி கொள்முதலை விரைவுபடுத்திடும் வகையில் பருத்தி கொள்முதலை அரசே ஏற்று கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். அனைத்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- விவசாயிகள் வாங்கிய கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்க விதை கரும்பு இலவசமாக வழங்க வேண்டும்.

தென்னை பயிர்

பொன்னவராயன்கோட்டை வீரசேனன்:- வேளாண்மைத்துறையின் கீழ் முக்கிய அங்கம் வகித்து வரும் தென்னை பயிர் தற்போது தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்போவதாக அச்சம் நிலவி வருகிறது. தென்னை விவசாயிகள் நலன் கருதி தென்னை பயிர் தொடர்ந்து வேளாண்மைத்துறையிலேயே இருக்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்:- வேளாண்மைத்துறை அறிவித்துள்ள சம்பா விதைநெல் ரகங்களை தனியாரிடம் விற்பனைக்கு வழங்காமல் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கினால் கலப்படமற்ற விதைநெல் விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அம்மையகரம் ரவிச்சந்தர்:- குறுவை தொகுப்பு திட்ட காலக்கெடுவை அடுத்தமாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி வரை நீட்டித்து தர வேண்டும்.

நிலக்கடலை

அய்யம்பேட்டை முகமது இப்ராகிம்:- திருவையாறு தாலுகாவில் இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளில் மஞ்சள் பூச்சி தாக்கியுள்ளது. கடன் வாங்கி செலவு செய்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவோணம் சின்னத்துரை:- குறுவை தொகுப்பு திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நிலக்கடலை விதை வழங்கப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் விதைத்தால் மழையினால் பாதிக்கப்படும் எனவே கார்த்திகை பட்டத்தில் விதைக்க நவம்பர் மாதத்தில் இந்த விதைகளை அரசு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.


Next Story