அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அரசு விடுமறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசனம் வழியில் நீண்ட வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.

4 மணி நேரத்திற்கு மேலானது

பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்குள் மட்டுமின்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென்சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

மேலும் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

இந்த கோவிலில் சிறிய இடுக்கு போன்ற உள்ள பாதை வழியாக படுத்தவாறு சென்று வெளிேயறி அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்வார்கள். இதற்காக நேற்று இடுக்கு பிள்ளையார் கோவில் அருகிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இடுக்கு பிள்ளையாரை வழிபட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story