நெல்லை ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல ஏராளமானோர் வந்ததால் நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் மீண்டும் ஊருக்கு திரும்புவதற்கு பள்ளி திறப்பை கருத்தில் கொண்டு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந்தேதியும், 6 முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு 12-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாததால் பொதுமக்கள் பலர் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பயணிகள் வந்த வாகனங்களால் இரவு ரெயில்நிலையம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை போலீசார் சரிசெய்தனர்.