திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தஞ்சை வழித்தடத்தில் அதிகாலையில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் திருச்சி ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தஞ்சை வழித்தடத்தில் அதிகாலையில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதேபோல வெளியூர்களில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இதற்காக சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று முன்தினம் 350 சிறப்பு பஸ்களும், நேற்று 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், மன்னார்புரம் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்திலும், வில்லியம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து தஞ்சை வழித்தடத்தில் திருவாரூர், நாகை, பட்டுக்கோட்டை, காரைக்கால், குடந்தை உள்ளிட்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

குவிந்த பயணிகள்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதனால் விடிய, விடிய பஸ்நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களில் புறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சிக்கு வந்து குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தஞ்சை மற்றும் அதன் வழித்தடத்தில் உள்ள ஊர்களுக்கு செல்லவேண்டியவர்கள் ஆவார்கள்.

சாலை மறியல்

அந்த நேரத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை வழித்தடத்தில் பஸ்கள் இல்லை. அதனால் அவர்கள் தஞ்சை பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பஸ்கள் இயக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ட்டது.

இதுபற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் பயணிகளை சமரசம் செய்தனர். பின்னர் 5 மணி அளவில் அவர்களுக்கு பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் பஸ்களில் சொந்தஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து வந்த சிறப்பு பஸ்கள் பயணிகள் இன்றி காலியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

நிற்க இடமின்றி பயணம்

நேற்று பஸ்நிலையங்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாக காணப்பட்டது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, அந்தியோதயா, குருவாயூர் உள்ளிட்ட ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. அதுபோல் சென்னை, தஞ்சை மார்க்கமாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் பயணித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையொட்டி போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story