ஆயுத பூஜை தொடர் விடுமுறை:சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ஆயுத பூஜை தொடர் விடுமுறை:சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம்

தொடர் விடுமுறை

ஆயுதபூஜை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. ஆயுதபூஜை திங்கட்கிழமையும், விஜயதசமி செவ்வாய்க்கிழமையும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால் மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது.

பொதுவாக ஆயுதபூஜை தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பஸ்கள், ரெயில்களில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருக்கும். அந்த வகையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலத்தில் தங்கி பணிபுரியும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. இதனால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டம்

ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, நேற்று முதல் சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக சேலம் புதிய பஸ்நிலையத்தில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு வரையிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, ஓசூருக்கு சென்ற பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருசில பயணிகள் பஸ்சில் இருக்கை கிடைக்காவிட்டாலும் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நின்று கொண்டு பயணம் செய்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ரெயில் நிலையம்

இதனிடையே, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் மூலம் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், கோவைக்கு சென்ற ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி பயணித்ததையும் பார்க்க முடிந்தது.


Next Story