வேலூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்


வேலூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
x

ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் பொரி, பூக்கள், பழங்கள், வாழை மரக்கன்று வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

வேலூர்

ஆயுத பூஜை

ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை பொங்கல், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.

அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள். தொழிலாளர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை போன்று ஆயுதபூஜையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

ஆயுதபூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி, அவல், வாழை மரக்கன்று உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலை முதல் வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் பஜாரில் பொதுமக்கள் குவியத்தொடங்கினர். இதையொட்டி லாங்குபஜார், மண்டி தெரு, மார்க்கெட் பகுதிகளில் வாழை மரக்கன்றுகள், பொரி, தர்பூசணி, பழங்கள் உள்ளிட்ட ஏராளமான தற்காலிக கடைகள் வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் கூட்டம்

ஆயுதபூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜாரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாங்க காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டித்தெருவில் கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, செயின்பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடந்த வாரத்தை விட 2 மடங்கு அதிகரித்து விற்பனையானது. கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனையான கனகாம்பரம் நேற்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

மல்லி- ரூ.700, முல்லை- ரூ.500, சம்பங்கி, சாமந்தி, பட்டன் ரோஜா- ரூ.200, ரோஜா (பெரியது) - ரூ.150, கோழிக்கொண்டை- ரூ.70, கேந்தி- ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேபோன்று ஆப்பிள் (ஒரு கிலோ) -ரூ.100 முதல் ரூ.200 வரையும், சாத்துக்குடி- ரூ.60 முதல் ரூ.100 வரையும், கொய்யாக்காய்- ரூ.120 முதல் ரூ.140 வரையும், மாதுளை- ரூ.120 முதல் ரூ.160 வரையும், வாழை மரக்கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. 10 வாழைக்கன்றுகள் கொண்ட ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.250-க்கும், ஒருபடி பொரி ரூ.15-க்கும், ஒரு மூட்டை பொரி ரூ.350-க்கும், பூசணிக்காய் ரூ.40 முதல் ரூ.100-க்கும், வில்வங்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கும் விற்பனையானது. ஒரு சில கடைகளில் பூ மற்றும் பழங்களின் விலையில் சிறிதளவு மாற்றங்கள் காணப்பட்டன.


Next Story