கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x

கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

குமரி,

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலம் கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் வார இறுதிநாட்களான சனிமற்றும், ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 7 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபத்தை பார்வையிட்டுவந்தனர்.

திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும், கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.


Next Story