ராமேசுவரம் கோவிலில் அலைமோதிய கூட்டம்


ராமேசுவரம் கோவிலில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 6:46 PM GMT)

மகளாய பட்சம் மற்றும் விடுமுறை நாளையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மகளாய பட்சம் மற்றும் விடுமுறை நாளையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ராமநாதசாமி கோவில்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருப்பது வழக்கம்.

அதுபோல் ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு முன்பு சுமார் 10 நாட்களுக்கு முன்பு மகாளய பட்சம் தொடங்கப்படும். மகாளய பட்சம் தொடங்கி அமாவாசை முடிவதற்குள் ராமேசுவரம் வந்து கடலில் நீராடி திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினால் இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்பப்படுகின்றது.

நீண்ட வரிசை

இந்த நிலையில் இந்த ஆண்டின் புரட்டாசி மாத மகாளய பட்சம் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த மகாளயபட்சமானது வருகின்ற 25-ந் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவடைகின்றது. இதனிடேயே மகாளய பட்சம் நடைபெற்று வருவதால் கடந்த ஒரு வாரமாகவே ராமேசுவரம் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனிடையே விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து இறந்த தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய திதிதர்ப்பண மற்றும் சங்கல்ப பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து ரத வீதி சாலையில் நீண்ட வரிசையில் நின்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

போக்குவரத்து நெரிசல்

கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்கு முதல் பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இலவச மற்றும் சிறப்பு தரிசன பாதையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். மகாளய பட்சம் மற்றும் விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்திருந்ததால் கோவிலின் மேற்கு ரத வீதி சாலையில் இருந்து ராம தீர்த்தம் வரையிலும் மற்றும் தனுஷ்கோடி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன.



Next Story