பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய அலைமோதும் கூட்டம் - டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றம்
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய கூட்டம் அலைமோதிய நிலையில், டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மூலம் சவாரி செய்து அங்குள்ள சதுப்பு நிலக் காடுகளின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, இன்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிச்சாவரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதையடுத்து படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து டோக்கன்களை பெற்றனர். அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் நண்பகல் துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்வதற்கான புக்கிங் நிறைவு பெற்றது. இதனால் ஏராளமானானோர் படகு சவாரி செய்வதற்கு டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.