விடுமுறை நாளில் திற்பரப்பு அருவியில் குளிக்க அலைமோதிய கூட்டம்
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்,
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
குமரி மாவட்டம் மலையோர பகுதியில் பெய்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதன்பிறகு மழை பெய்யாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து மிதமாக கொட்டியது. எனினும் விடுமுறை நாளான நேற்று அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.
உற்சாகம்
மேலும் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக குளித்ததை காணமுடிந்தது. அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசித்தனர். திற்பரப்புக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இதேபோல் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி தவித்தன. இதற்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.