ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2023 8:00 PM GMT (Updated: 24 Oct 2023 8:00 PM GMT)
திண்டுக்கல்

வாரவிடுமுறை, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு வேலை, தொழில் ரீதியாக சென்றவர்கள் தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பினர். இதேபோல் திண்டுக்கல்லில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கும் பலர் வந்தனர். இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்ததால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர். இதுதவிர ஆன்மிக சுற்றுலா தலமான பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் சொந்த ஊருக்கு நேற்று சென்றனர்.

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள், சிக்கலின்றி ரெயில்களில் சென்றனர். ஆனால் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுக்காதவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், பஸ்களிலும் பயணிக்க நேர்ந்தது. இதனால் திண்டுக்கல் வழியாக சென்ற ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் படிக்கட்டுகளில் அமர்ந்து மக்கள் பயணித்தனர்.

இதற்கிடையே பஸ்களில் செல்வதற்காக திண்டுக்கல், பழனி பஸ் நிலையங்களில் நேற்று மதியத்தில் இருந்தே மக்கள் குவிய தொடங்கினர். பின்னர் இரவில் ஏராளமான மக்கள் திரண்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல், பழனியில் இருந்து வெளியூர் சென்ற அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருசில பஸ்களில் இருக்கை கிடைக்காமல் மக்கள் நின்று கொண்டே பயணித்தனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் விடிய, விடிய மக்கள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story