நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்


நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
x

ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க நாகை கடைத்தெருவில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க நாகை கடைத்தெருவில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயுத பூஜை

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த பூஜையின் போது பொரி, அவல், பொரிக்கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், தேங்காய், பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

பொருட்கள் வாங்க குவிந்தனர்

அதேபோல் ஆட்டோ, கார் நிறுத்தங்கள் மற்றும் தொழில் புரியும் அனைத்து இடங்களிலும் செய்யும் தொழிலே தெய்வம் என கருதி பூஜைகள் நடத்தப்படும். ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக நாகையை சுற்றியுள்ள செல்லூர், பாலையூர், அந்தணப்பேட்டை, பாப்பாகோவில், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க குவிந்தனர். கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்வமுடன் வாங்கி சென்றனர்

நாகை நீலாவீதிகள், புதிய பஸ் நிலையம், ஆஸ்பத்திரி ரோடு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை-நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொரி, பொரிக்கடலை, பழவகைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

வாகனங்களில் கட்டுவதற்காக வாழைக்குலை, வாழை கட்டுகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பூக்களின் விலை உயர்வு

பூசணிக்காய், வாழை இலை மற்றும் பூஜை பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். நேதாஜி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாலை கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.

மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.800, அரளி ரூ.500, ரோஸ், செவ்வந்தி ரூ.300, செண்டி, கோழி கொண்டை ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது. ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் நாகை கடைத்தெரு களை கட்டியது.


Next Story