சிஆர்பிஎப் பணி தேர்வு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே சி.ஆர்.பி.எப். கணினித் தேர்வு எழுத முடியும் என்ற அறிவிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை,
இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் சிஆர்பிஎப் பணிகளுக்கு தேர்வு நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வரும் திங்கட்கிழமை சென்னையில் உள்ள "சாஸ்திரி பவன்" அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை திமுக இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது. தேர்வில் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை உணர்ந்த திமுக தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப்படவுள்ளன.
நமது அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், மேற்கூறிய பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிப்பது, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்பு காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு கட்டக்கூடியதும் ஆகும்.
ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது, இத்தேர்வை எழுத விரும்பும் இந்தி அறியாத இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் தமிழக மாணவர்களின் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.எனக் குறிப்பிட்டு, மத்திய உள்துறை மந்திரி இதில் உடனடியாக தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும், சி.ஆர்.பி.எப்.-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்பணியில் சேருபவர்களின் தகுதியென்பது, நல்ல உடல் வலிமை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம் ஆகியவையே எனும் போது, இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக இதனை கட்டமைக்க முயற்சிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதற்கு மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்.
இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணித்தே தீருவேன் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் இந்தியை மட்டுமே கட்டாயமாக்குவேன் என்றும், இந்தி பேசாத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுவார்கள் என்றும் பாஜக அரசு சர்வாதிகார தன்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பது தான் இந்திய துணைக் கண்டத்தின் ஒரே முழக்கமாகும். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து "ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்" என்று சர்வாதிகாரத் தன்மையோடு செயல்படுவதை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாகக் கண்டிகிறது.
திமுக தலைவர், தமிழக முதல்-அமைச்சர், மத்திய உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நடைபெறவுள்ள சி.ஆர்.பி.எப். தேர்வில் இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்கிட, மத்திய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, கழகத் தலைவர்-தமிழக முதல்-அமைச்சரின் ஆணையேற்று, திமுக இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், வரும் 17.04.2023 அன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம், "சாஸ்திரி பவன்" அருகில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.