3-வது நாளாக தொடரும் கச்சா எண்ணெய் கசிவு


3-வது நாளாக தொடரும் கச்சா எண்ணெய் கசிவு
x

3-வது நாளாக தொடரும் கச்சா எண்ணெய் கசிவு

நாகப்பட்டினம்

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று 3-வதுநாளாக குழாயில் கச்சா எண்ணெய் கசிந்தது. குழாய் உடைப்பை அடைக்க சி.பி.சி.எல். அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

சி.பி.சி.எல். நிறுவனம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் கடலில் கலந்தது

கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலந்தது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள் கடற்கரைக்கு சென்று கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள, எண்ணெய் குழாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் சீற்றம்

இது குறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் பனோத்ம்ருகேத்லால் மற்றும் போலீசார் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் சி.பி.சி.எல். அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் உடைப்பு சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

கடந்த 3-ந்தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அலையின் சீற்றம் குறைந்ததால் கடல் நீர் உள்வாங்கியது. இதைத்தொடர்ந்து 3 பொக்லின் எந்திரங்கள், எண்ணெய் உறிஞ்சும் நவீன எந்திரம் ஆகியவற்றை சி.பி.சி.எல். அதிகாரிகள் கொண்டு வந்து குழாய் உடைப்பை சரி செய்தனர்.

3-வதுநாளாக கச்சா எண்ணெய் கசிவு

இந்த நிலையில் உடைப்பு சரி செய்யப்பட்ட குழாயில் இருந்து நேற்றுமுன்தினம் காலை மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்ததால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. எனவே கச்சா எண்ணெய்யை அகற்றக்கோரி நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சி.பி.சி.எல். அதிகாரிகள் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நாகூர்- பட்டினசேரி பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் திணறல்

ஆனால் 3-வதுநாளாக மீண்டும் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் குழாய் உடைப்பை சரிசெய்ய சி.பி.சி.எல். அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நாகூர் பட்டினச்சேரி பொதுமக்கள் சி.பி.சி.எல். அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கடற்பகுதியில் இருந்து முழுமையாக குழாய்களை அகற்ற வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் பனோத்ம்ருகேத்லால், தாசில்தார் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் நேற்று 3-வதுநாளாக நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 ஆண்டுகள்

இதுகுறித்து சி.பி.சி.எல். முதன்மை பொது மேலாளர் ஆனந்த் கூறுகையில், நாகூர் பட்டினச்சேரி வழியாக செல்லும் குழாய்க்கு மாற்று ஏற்பாடாக வேறு பாதையில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி நிறைவு பெற 3 ஆண்டுகள் ஆகும். அந்த பணி நிறைவு பெற்றவுடன் நாகூர் பட்டினச்சேரி வழியாக பயன்பாட்டில் உள்ள குழாய் அகற்றப்படும் என்றார்.


Related Tags :
Next Story