கச்சா எண்ணெய், கடலில் கலந்தது


தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:46 PM GMT)

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடற்கரையில் இருந்து குழாய்களை நிரந்தரமாக அகற்றக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடற்கரையில் இருந்து குழாய்களை நிரந்தரமாக அகற்றக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுத்திகரிப்பு நிலையம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், சென்னை பெட்ரோலிய கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சென்னை பெட்ரோலிய கழகத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடலில் கச்சா எண்ணெய் கலந்தது

இந்த குழாய் கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் நேற்று முன்தினம் இரவு உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.

குழாயில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பட்டினச்சேரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் கச்சா எண்ணெய் கடலில் பரவி வருகிறது. இதனால் கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நெடி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மீனவர்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை பெட்ரோலிய கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குழாய் உடைந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலந்த தகவல் அறிந்ததும் மீனவர்கள், கிராம மக்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் நேற்று காலை கடற்கரையில் குவிந்தனர். பின்னர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கப்பல்களில் ஆய்வு

இதனைத்தொடர்ந்து பட்டினச்சேரி கடற்கரையில் மீனவ பஞ்சாயத்தார்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில், எண்ணெய் குழாயை கடற்கரையில் இருந்து உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டத்தை தொடருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு கச்சா எண்ணெய் பரவி உள்ளது என்பதை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஊழியர்களை தடுத்து நிறுத்தினர்

இதற்கிடையே உடைப்பு ஏற்பட்ட எண்ணெய் குழாய்களை சீரமைக்க சென்னை பெட்ரோலிய கழக ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்களை மீனவர்கள் தடுத்து நிறுத்தி கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயை அங்கிருந்து நிரந்தரமாக அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாலை வரை நடத்த போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.

பரபரப்பு

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story