மறு உத்தரவு வரும்வரை பட்டினச்சேரி வழியாக கச்சா எண்ணெய் ெகாண்டு செல்ல தடை


மறு உத்தரவு வரும்வரை பட்டினச்சேரி வழியாக கச்சா எண்ணெய் ெகாண்டு செல்ல தடை
x

3 நாட்களுக்கு பிறகு குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை பட்டினச்சேரி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

3 நாட்களுக்கு பிறகு குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை பட்டினச்சேரி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சி.பி.சி.எல். நிறுவனம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

கடலில் கலந்த கச்சா எண்ணெய்

இந்த குழாயில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. தொடர்ந்து குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறிக்கொண்டு இருந்தால் கடல் நீர் முழுவதும் பரவி கருப்பாக காணப்பட்டது.

குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்ததை கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சி.பி.சி.எல். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கடந்த 3 நாட்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

குழாய் உடைப்பு சீரமைப்பு

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சி.பி.சி.எல். ஊழியர்கள், குழாய் உடைப்ைப நேற்று முன்தினம் இரவு சரி செய்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பட்டினச்சேரி கடற்கரைக்கு வந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள், நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறுஉத்தரவு வரும் வரை...

சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.சி.எல். அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் சீரமைக்கப்பட்டு விட்டதால் மீனவர்கள் அச்சம் அடைய வேண்டாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை இந்த குழாய் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வது உள்ளிட்ட எந்த பணிகளையும் சி.பி.சி.எல். நிர்வாகம் ஈடுபட கூடாது.

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் வருகை தர உள்ளனர். அவர்கள் தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பார்கள். இதன் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

கலெக்டர் கேட்டுக்கொண்டதன் பேரில் 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


Next Story