சிதிலம் அடைந்து காணப்படும் மர சிற்பங்கள்


சிதிலம் அடைந்து காணப்படும் மர சிற்பங்கள்
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்கள் சிதிலம் அடைந்து காணப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்கள் சிதிலம் அடைந்து காணப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கிரிவலப்பாதை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று அழைக்கின்றனர். கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும்.

இந்த மலையை சுற்றியுள்ள வனப்பகுதியையொட்டி கிரிவலப்பாதை உள்ளதால் எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மரம், செடிகளுடன் காணப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமி கலெக்டராக இருந்த போது வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் வனத்துறையினர் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களில் அழகிய மர சிற்பங்கள் செதுக்கப்பட்டன.

கிரிவலப்பாதையை சுற்றி 50 இடங்களில் பட்டுப்போன மரங்களில் முதலை, பெண் குழந்தை, யானை, இரட்டை குழந்தை, அணில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மர சிற்பங்கள் செதுக்கப்பட்டது.

சிதிலம் அடைந்த மரசிற்பங்கள்

இந்த மர சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் அதனை சுற்றி தூண்கள் எழுப்பப்பட்டு இரும்பு கம்பியால் வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் கிரிவலப்பாதை மேலும் அழகாக காணப்பட்டது. பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த மர சிற்பங்கள் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்கள் பெரும்பாலானவை சிதிலம் அடைந்து காணப்படுகிறது.

மர சிற்பங்கள் பெயர்ந்தும், தூர்ந்து போயும் காணப்படுகிறது. சில இடங்களில் வேலிகள் மட்டும் உள்ளது. அங்கிருந்த மர சிற்பங்களை காணவில்லை.

மர சிற்பங்கள் இருந்த இடங்களில் புதியதாக செடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. தற்போது கிரிவலம் வரும் பக்தர்கள் கடந்த முறை வரும்போது அழகாக காட்சி அளித்த மர சிற்பங்கள் தற்போது சிதிலம் அடைந்து உள்ளதே என்று வேதனையாக தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் கோரிக்கை

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்தின் போது திருவண்ணாமலையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு குறுகிய நாட்களே உள்ளதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க முடிந்த மர சிற்பங்களை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரமைக்க முடியாத மர சிற்பங்களை அகற்றி விட்டும் அந்த இடத்தில், ஏற்கனவே அகற்றப்பட்டு காலியாக உள்ள வேலி பகுதிகளில் திருக்குறள், திருவாசகம், சிவபுராணம் போன்றவை எழுதப்பட்ட கல்வெட்டுகள் வைத்தால் திருவண்ணாமலையில் ஆன்மிகம் மட்டுமின்றி தமிழும் வளரும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story