சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கோவையில் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலம்
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளிடக்கி சி.எஸ்.ஐ ஆலயங்கள், சி.எஸ்.ஐ பள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க கூடாது என்று கூறி கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஈரோட்டை சேர்ந்த சி.எஸ்.ஐ. அமைப்பினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
300 பேர் கைது
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலம் 5 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த திருமண்டலத்தை 2 ஆக பிரித்து சேலம் திருமண்டலம் என்ற பெயரிட போவதாகவும், ஈரோடு, திருப்பூர் வட்டத்தில் உள்ள சுமார் 50 போதக சேகரங்களை மேற்கொண்ட திருச்சபைக்கு, மக்கள் கருத்துக்களை கேட்காமலே பேராயர் மண்டலத்தை பிரிக்க போவதாக தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.