கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி


கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி
x

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியானார்கள்.

கடலூர்

கடலூர்,

கடலூர் அருகே உள்ள ஏ.குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணால். இவருடைய மனைவி ஹரிப்பிரியா(வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 1 மாதம் ஆகிறது. குணாலின் தங்கை நவநீதா(19). டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.

குணாலின் வீட்டுக்கு அவரது உறவினரான அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகிய 2 பேரும் கோடை விடுமுறைக்காக வந்திருந்தனர். பிரியதர்ஷினி 10-ம் வகுப்பும், காவியா 6-ம் வகுப்பும் தேர்வு எழுதியுள்ளனர்.

குளிக்க சென்றனர்

குணால் வீட்டின் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை அருகில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க ஹரிப்பிரியா, நவநீதா, பிரியதர்ஷினி, காவியா ஆகிய 4 பேரும் சென்றனர். அவர்களுடன் குணாலின் உறவினர்களான அமர்நாத் மகளான 10-ம் வகுப்பு மாணவி மோனிஷா(16), சங்கர் மகளான செவிலியர் சங்கவி (15), முத்துராமன் மகள் சுமதா(18) ஆகிய 3 பேரும் சென்றனர்.

முதலில் ஹரிப்பிரியா, நவநீதா, பிரியதர்ஷினி, காவியா ஆகிய 4 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். மற்ற 3 பேரும் கரையில் இருந்தனர்.

அப்போது 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர்கள், அபயக்குரல் எழுப்பினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 3 பேரும், அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளனர். அவர்களும் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் திணறி உள்ளனர்.

7 பேர் பலி

இதனால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று மரண ஓலமிட்டனர். அதற்குள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றும், முடியாமல் ஒவ்வொருவராக ஆற்றில் மூழ்கினர்.

இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்த இளைஞர்கள் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் 7 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து இளைஞர்கள் ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 7 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கதறி அழுத உறவினர்கள்

தகவல் அறிந்ததும் ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், 7 பேரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அங்கு உடல்களை பார்த்து கதறி அழுதனர். சிலர் தரையில் புரண்டு கதறி அழுதனர். இது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினார். மேலும் ஆற்றில் மூழ்கி இறந்த 7 பேரின் உடல்களையும் பார்வையிட்டார்.

விசாரணை நடத்த உத்தரவு

இதற்கிடையே அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்பிரமணியம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, 7 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிவாரண உதவியாக 7 பேர் குடும்பங்களுக்கும் வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், 'குளிக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி திருமணமான பெண், மாணவிகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இது எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் 7 பேர் இறந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது எப்படி? மண்ணின் தன்மை என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு்ள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாது:-

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), காவியா என்கிற திவ்யதர்ஷிணி (10) மற்றும் பிரியதர்ஷிணி (15) ஆகிய 7 பேர் குளிக்க சென்றுள்ளனர். குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரங்கல்-நிதியுதவி

உயிரிழந்தோரில் 5 பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story