கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்ரூ.5½ கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம்


கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்ரூ.5½ கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம்
x

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.5½ கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கடலூர்

அண்ணா விளையாட்டு மைதானம்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் பழமைவாய்ந்த அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வாலிபால், ஓடு தளம், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் உள் அரங்கம், கிரிக்கெட், இறகுப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் தனித்தனியாக உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் வந்து பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தவிர நடைபயிற்சிக்காக காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நீச்சல் குளமும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மைதானம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் விளையாட்டு வீரர்களுக்கும், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும் வசதியாக இருக்கிறது.

உள் விளையாட்டு அரங்கம்

இந்நிலையில், இந்த மைதானத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்படி தற்போது இங்கு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.

மத்திய அரசு குழு ஆய்வு

இது பற்றி கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவாவிடம் கேட்ட போது, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.5 கோடியே 55 லட்சம் செலவில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம்தமிழக அரசு மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு குழுவினர் கடந்த ஜூன் மாதம் வந்து, பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைய இருக்கும் மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது உள் விளையாட்டு அரங்கம் அமைய உள்ள நீளம், அகலம் குறித்த விவரங்களை அளவீடு செய்தனர். தொடர்ந்து அவர்கள் அறிக்கையை மத்திய அரசிடம் நிர்வாக அனுமதிக்காக சமர்ப்பித்து உள்ளனர். இதற்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும், இந்த பணிகள் நடைபெறும். இந்த பணிகள் தொடங்கினால், சர்வதேச தரத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமையும். இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் கபடி, வாலிபால், கூடைப்பந்து, டென்னிஸ், கோ-கோ, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து விதமான உள் அரங்க விளையாட்டுகளும் விளையாட முடியும். இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் மழைக்காலங்களிலும் எவ்வித தடையும் இன்றி பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.


Next Story