கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 5:56 PM GMT)

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

அரசியல் தலையீட்டின் காரணமாக கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரது தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மதியம் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

இதற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர்கள் பூபாலச்சந்திரன், ராஜேஷ்பாபு மற்றும் ஸ்ரீதரன் உள்பட அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரையுள்ள அனைவரும் பங்கேற்றனர். இதேபோல் தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறை அலுவலர்களின் இந்த போராட்டத்தால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.


Next Story