தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை: கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை: கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர்

கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் விஜயபாரதி (வயது 26), தொழிலாளி. இவருக்கும் அதே காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (28) என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23.7.2017 அன்று விஜயபாரதி, அஜித், முத்தழகன், இரணியன், மோகன், கலைவாணன் ஆகியோர் வாலிபால் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரு (35), பழனிச்சாமி (24), ராஜேஷ் (28), நாகராஜ் (28) ஆகியோர் விஜயபாரதி, அஜித், முத்தழகன், இரணியன் உள்ளிட்டோரை கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி வனஜா, தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.4,500 அபராதமும், ராஜேசுக்கு 6 மாத சிறை மற்றும் ரூ.3,500 அபராதமும், நேரு, பழனிச்சாமி, நாகராஜ் ஆகியோருக்கு தலா ரூ.3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.


Next Story