கடலூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கடலூர்,
கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அவரது மகள் வனிதா பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையை வனிதாவின் கணவர் மோகன்ராஜ் (வயது 36) கவனித்து வந்தார். இந்த ஆலையில் நாட்டு வெடி, வானவெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று மதியம் வெள்ளக்கரையை சேர்ந்த சின்னதுரை மகன் வைத்தியலிங்கம் (37), அவரது அண்ணன் பழனிவேல் ஆகிய 2 பேரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு வெடி வாங்குவதற்காக அங்கு வந்திருந்தனர்.
அவர்களை வெளியே நிற்குமாறு கூறிய, தொழிலாளர்கள் வெடியை சுற்றி தருவதாக கூறினர். இதனால் அவர்கள் 2 பேரும் சுமார் 50 அடி தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காத்திருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து சிதறின. வான வெடிகளும் வெடித்து ஆங்காங்கே சிதறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைத்தியலிங்கம், பழனிசாமி ஆகிய 2 பேரும் அலறி அடித்து ஓடினர். அப்போது வைத்தியலிங்கம் மீது வானவெடி விழுந்து, அவரது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும், புகை மூட்டமாக இருந்ததாலும் கிராம மக்களால் அருகில் செல்ல முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அங்கு பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமாக கிடந்தது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த பெரியகாரைக்காட்டை சேர்ந்த அகோர மூர்த்தி மனைவி சித்ரா(38), நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா(50), மூலக்குப்பத்தை சேர்ந்த ரத்தினவேலு மகன் சத்தியராஜ் ஆகிய 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆங்காங்கே அவர்களது கை, கால்கள், உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன.
இந்த விபத்தில் அங்கு வேலை செய்யும் வசந்தா என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.