அவுரி செடிகளை பயிரிட ஊக்கப்படுத்த வேண்டும்

மருத்துவ குணம் கொண்ட அவுரி செடிகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
மருத்துவ குணம் கொண்ட அவுரி செடிகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
காரியாபட்டி, நரிக்குடி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. மழை பெய்து கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தவுடன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
பின்னர் வானம் பார்த்த பூமியாக உள்ள காடுகளில் அதாவது புஞ்சை நிலங்களில் விவசாயமாக நிலக்கடலை, எள், துவரை மற்றும் பயறு வகைகள் பயிரிட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலானோர் போர்வெல் அமைத்து அதன் மூலம் வெங்காயம், வாழை, நிலக்கடலை, கரும்பு ஆகியவற்ைற பயிரிட்டு வருகின்றனர்.
அவுரி செடி
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வயல்களில் அறுவடைக்கு பிறகு கோடைகாலத்தில் அவுரி விதைகளை விதைத்து விடுவார்கள். மழை இல்லாவிட்டாலும் பனிக்கு நன்றாக இந்த அவுரி செடிகள் விளையும். அவுரி இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வயல்களிலும் விதைப்பார்கள்.
ஆனால் கடந்த காலங்களில் அவுரி பயிர் எங்குமே காணப்படுவதில்லை. அவுரிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் அவுரி பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். அவுரி மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மருந்துகள் தயாரிப்பதற்கு வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுவார்கள். ஆனால் அவுரி தற்போது விளைச்சல் குறைந்துவிட்டது.
ஊக்கப்படுத்த வேண்டும்
கோடைக்காலத்தில் விவசாயிகளுக்கு அவுரி பலன் தருவதாக இருந்து வந்தது. ஆனாலும் தற்போது கல்குறிச்சி பகுதிகளில் உள்ள கரிசல் காடுகளில் அவுரி விதைக்கப்பட்டு அமோகமாக விளைந்துள்ளது.
மேலும் அவுரி செடியை அனைத்து விவசாயிகளும் அதிகமாக பயிரிட ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






