கீழ்ப்பாக்கத்தில் கலாசார நிகழ்ச்சி நிறைவு: மருத்துவ கல்லூரி மாணவிகள் அசத்தல் நடனம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 4 நாட்கள் நடந்த கலாசார நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் அசத்தல் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கலாசார விழா
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் 'பிரதர்ஷினி' என்ற பெயரில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் கலை கலாசார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 43-வது ஆண்டாக இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி கலாசார நிகழ்ச்சி தொடங்கியது.
நாடாளுமன்ற உறுப்பினரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவியுமான டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு தொடங்கி வைத்தார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும், தென்னிந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
பாராட்டு
ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி-வினா, சோப்பில் உருவம் வரைதல், பாடல், நடனம், இசை, நாடகம், பட்டிமன்றம், மிமிக்ரி, ரங்கோலி கோலமிடுதல் உள்பட 45-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நடனம், இசை உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நடிகர் கபாலி விஸ்வந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 1979-ம் ஆண்டு முதன் முறையாக இந்த போட்டியை தொடங்கிய முன்னாள் மாணவரான டாக்டர் விஜயராகவன் கலந்து கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
லயோலா கல்லூரி சாம்பியன்
இறுதி போட்டி முடிவில், சென்னை லயோலா கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்பின்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. கலாசார விழா நடைபெற்ற கல்லூரி வளாகத்தில் 'தினத்தந்தி' சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
இதில், தந்தி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்கை பார்வையிட்ட மாணவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.