தண்ணீரின்றி காயும் குறுவை


தண்ணீரின்றி காயும் குறுவை
x

தஞ்சையை அடுத்த திட்டை பகுதியில், பால் பிடித்து கதிர்வரும் தருவாயில் உள்ள குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. ஒருமாதத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் இந்த பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த திட்டை பகுதியில், பால் பிடித்து கதிர்வரும் தருவாயில் உள்ள குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. ஒருமாதத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் இந்த பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவை குறைந்து சம்பா, தாளடி பரப்பளவு அதிகரிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடி 3 லடசத்து 42 ஆயிரத்து 696 ஏக்கரில் நடவு செய்யப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சி இதுவரை இல்லாத அளவிற்கு 5.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட குறுவை பயிர் மட்டுமே தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது.

கதிர் வரும் நிலை

ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் வளர்ந்த நிலையிலும், பயிர்கள் வளர்ச்சிப் பருவத்தில் அதாவது பால் பிடித்து கதிர் வரும் தருவாயில் உள்ளது. இந்த பயிர்கள் இன்னும் 20 நாட்களில் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். குறிப்பாக இந்த மாதம் இறுதியிலிருந்து அக்டோபர் 20 -ந்தேதிக்குள் அறுவடை பணி முழுவீச்சை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தஞ்சையை அடுத்த திட்டை பகுதிகளில் ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தற்போது பால்பிடித்து கதிர் வரும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. எனவே, இப்பயிர்களுக்கு தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதை வைத்து ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிட முடியும் என்ற நிலைமை உள்ளது. இதனால், குறுவை பயிரைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சத்துடன் விவசாயிகள் உள்ளனர்.

விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏறத்தாழ 90 சதவீத பயிர்கள் கதிர் விடும் நிலையிலிருந்து கதிர் வந்த நிலை வரை உள்ளன. தற்போது பயிர்கள் அனைத்தும் நன்கு பச்சையாக இருக்கிறது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. இந்தத் தண்ணீரை பாய்ச்சிய பிறகு அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு பயிர்கள் தாங்கும். ஆனால் தற்போதே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் காயத்தொடங்கி விட்டன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு குறிப்பாக கதிர் வரும் நிலையில் தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. மொத்தத்தில் 30 நாட்கள் வரை தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றார் இல்லை என்றால் பயிர்கள் கருகி பதராகி விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.


Related Tags :
Next Story