சுங்கச்சாவடி ஊழியர்கள் உருவ பொம்மைக்கு பாடை கட்டி நூதன போராட்டம்


சுங்கச்சாவடி ஊழியர்கள் உருவ பொம்மைக்கு   பாடை கட்டி நூதன போராட்டம்
x

திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உருவபொம்மைக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

40-வது நாளாக போராட்டம்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்களில் 28 பேரை பணி நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. தற்போது ஒவ்வொரு நாளும் அவர்கள் நூதன போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஊழியர்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 40-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

ஊழியர்களில் ஒருவர் இறந்தது போல்...

அப்போது சுங்கச்சாவடி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில், சங்கத்தின் கிளை தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் பச்சமுத்து ஆகியோர் முன்னிலையில் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஊழியர்களில் ஒருவர் இறந்தது போல் உருவ பொம்மை வைத்து, அதற்கு பாடை கட்டி, உருவ பொம்மைக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அதனை சுற்றி நின்று ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உருவ பொம்மையை ஊர்வலமாக கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து, அதனை எரியூட்டி தகனம் செய்தனர். மேலும் அவர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை போராடுவதாக கோஷங்களை எழுப்பினர்.


Next Story