மானாமதுரை அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் 200 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்
மானாமதுரை அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் 200 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மானாமதுரை
மானாமதுரை அருகே உள்ளது கோச்சடை கிராமம். இக்கிராமத்தில் உள்ள அய்யனார் கண்மாய் கரையில் களதி உடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கு குல தெய்வமாக இருக்கும் முத்தையா கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் 300 முதல் 400 கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மதியம் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மானாமதுரையை சுற்றி உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள் சாமியை வேண்டிச் சென்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதம் நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றியதை தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு கோவில் முன்பு 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பலியிட்டு சுவாமிக்கு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர்.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் மொத்தமாக ஒன்று சேர்ந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. 200 ஆடுகளை பலியிட்ட பக்தர்கள் பின்னர் அந்த ஆடுகளை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவது வழக்கமாகும்.