அரிவாள் மனையால் வெட்டு: மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை -ஐகோர்ட்டு தீர்ப்பு


அரிவாள் மனையால் வெட்டு: மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை -ஐகோர்ட்டு தீர்ப்பு
x

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக மனைவியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கோபத்தில் அங்கிருந்த மாமியாரை அரிவாள் மனையால் சிவசுப்பிரமணி வெட்டியுள்ளார். பலத்த காயம் அடைந்த மாமியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆத்தூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவசுப்பிரமணியை கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, சிவசுப்பிரமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த மே மாதம் 25-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவசுப்பிரமணி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

சிவசுப்பிரமணியுடன் அவரது மாமியார், மனைவி சமரசமாக போய் விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 18-ந்தேதி சிவசுப்பிரமணியின் மாமியார், 3 குழந்தைகளுடன் மனைவி ஆகியோர் ஆஜராகினர்.

சமரசம்

அப்போது, "தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். 3 குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் என்னை வெட்டிய மருமகனை மன்னித்து விட்டேன். எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது. அதனால் மருமகனை விடுதலை செய்யுங்கள்" என்று மாமியார் கூறினார். இதுகுறித்து மனுவும் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அரியானாவை சேர்ந்த ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டால், அதை ஏற்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 482-ன் கீழ் வழக்கை ரத்து செய்யலாம் என்று கூறியுள்ளார்.

விடுதலை

அந்த கொள்கையின்படி தண்டனையையும் ரத்து செய்யலாம். அதன்படி, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். அவர்கள் கருத்து வேறுபாட்டை மறந்து விட்டனர்.

எனவே, இந்த ஐகோர்ட்டுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்கிறேன், அவரை விடுதலை செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story