தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு
களக்காடு அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லபாண்டி மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் நெல்லையில் உள்ள தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையடியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது.
அப்போது கீழச்சடையமான்குளத்தை சேர்ந்த பேச்சி மகன் பரமசிவன் என்ற சிவாவும், (30) அவரது நண்பரான மேலகாடுவெட்டியை சேர்ந்த பால்ராஜ் மகன் இசக்கிபாண்டியும் (32) விசில் அடித்து தகராறு செய்தனர். இதை முத்துக்குமார் தட்டி கேட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முத்துக்குமாரின் சகோதரி நதியா மற்றும் அண்ணன் மகள் உமாபிரியா ஆகியோர் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த பரமசிவன், இசக்கிபாண்டி ஆகியோர் அவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதையறிந்த நதியா, உமாபிரியாவின் உறவினர்கள் சுபாஷ், செல்வம் ஆகியோர் இசக்கிபாண்டி வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். அப்போது முத்துக்குமாரும் சென்றார். இதையடுத்து இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக பரமசிவன், இசக்கிப்பாண்டியை தேடி வருகின்றனர்.