விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர்


விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜரானார். இதன் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

செஞ்சி தாலுகா நாட்டார்மங்கலம் பஸ் நிலையம் அருகில் கடந்த 7.3.2023 அன்று அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் எம்.பி. மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.

சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர்

இவ்வழக்குகள் நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜரானார். இந்த விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல் சுப்பிரமணியன் வாதிடுகையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் தற்போது நேரில் ஆஜராகியுள்ளதால் இரு வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

அதற்கு சி.வி.சண்முகம் எம்.பி. குறுக்கிட்டு, நாட்டார்மங்கலம் வழக்கில் மட்டுமே தனக்கு சம்மன் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஆரோவில் வழக்கில் தனக்கு இன்னும் சம்மன் கிடைக்கப்பெறவில்லை என்பதால் ஆரோவில் வழக்கில் எப்படி ஆஜராக முடியும் என்று கூறியதோடு, நாட்டார்மங்கலம் வழக்கில் மட்டுமே ஆஜராக வந்துள்ளேன் என்றார். இதே வாதத்தை அ.தி.மு.க. வக்கீல்களும் முன்வைத்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த

நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அ.தி.மு.க. வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சங்கரன், சீனிவாசன், ஸ்ரீதர், வேலவன், தமிழரசன், ராதிகா செந்தில், சுபாஷ் உள்பட பலர் ஆஜராகினர்.


Next Story